நந்தியாவட்டை
நந்தியாவட்டை செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும் மருத்துவ மூலிகைச் செடியாகும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.
நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்த, கரும்பச்சை நிறமான, ஈட்டி வடிவமானவை. நந்தியாவட்டை மலர்கள், ஆண்டு முழுவதும் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.
மாற்றுப் பெயர்கள்
நந்திபத்திரி,
நந்தியாவர்த்தம்,
சுயோதனன் மாலை
நந்தியாவட்டை பால்
நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும்.
நந்தியாவட்டை வேர்
நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும். பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
நந்தியாவட்டை பூ கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.
நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும். நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.